Pages

Wednesday, February 23, 2011

தனிமை


தவறி விழுந்த ஒருரூபாய் நாணயம்
உருண்டோடி அரை வட்டமடித்து
இயன்றவரை பூமியின் நீல அகலங்களை
அளவெடுத்து அடங்கும் லாவகம்,
இறைந்துக்கிடக்கும் உன்னைப்பற்றியதான
கனவுகளை கவிதையாக்குவதில்
பிடிபடுவதில்லை

பிரகடனப்படுத்த வேண்டி
பிரபஞ்சம் சுற்றியலைந்து தோற்று
கடைசியில்
உன் மில்லிமீட்டர் புன்னகையில் நிலைப்பட்டு
ஞாபகம் இழுத்துப் போர்த்தி
கால் மடக்கிக் குறுகிப்படுத்துறங்கும்
நீயற்ற பொழுதுகளில்
வெறுமை.

பகுதியை விகுதியாக்கி
விகுதியை பகுதியாக்கி
கூட்டிக்கழித்து
அதை பெருக்கி வகுக்கும்
நீயற்ற நொடிகளை
மாதங்களாய் கணக்கிடப்பழகிய
காத்திருப்புகள்..

கொடூரமாய் ஏக்கங்களை கொன்று தின்று
நினைவை உறிஞ்சிக்குடித்து
போசாக்காய் வளரும் தனிமை
நாளை இன்னாறெனச் சொல்லாமல்
நீண்ட நேரம் தட்டிக்கொண்டிருக்கலாம்
உன் ஆசையின் கதவுகளை....

Thursday, February 17, 2011

மழை!!

ஆக்ரோஷமாய்
மோதிப் புணர்ந்தன
மேகங்கள்....
இந்திரியமாய் ஒழுகி வழிந்தது
"மழை"
உயிர்த்து முளைத்தன
பெயர்த்தெரியாச் செடியின்
புதையுண்ட விதைகள்..

Monday, February 7, 2011

பகிர்தல்..

குதூகலங்கள்
ஒருமித்தமாய் போட்டோ எடுத்து
பிரேம் போட்டு மாட்டப்பட்டது..
மாலை சூரியனின் சுடர்
போட்டோக்கண்ணாடியில் பட்டு
பக்கவாட்டுச் சுவற்றில்
பிம்பங்களாய் தெரிகின்றன
அசல் நாட்டில் பகிரப்படாத நட்புக்கள்

வாழ்க்கை .....

ஓடி ஓடி ஒளிகிறேன்
வாழ்க்கைக்குள்....!!
நாளை..,
எனக்குள்ளும் ஓடி ஒளியலாம்
வாழ்க்கை .....

Sunday, February 6, 2011

எனக்குள் நீ...!!


இதயத்தின் சமதளப்பலகையில்
ஒரு முனையில் என் வாலிபம்
மறுமுனையில் உன் காதல்...
உன் காதல் அதிகரிக்க அதிகரிக்க
எகிறித் தத்தளிக்கின்றது வாலிபம்!!

உனக்குள் நான் இல்லை என்று நீ நடிப்பது
முழுவதுமாய் உனக்குள் ஒளிந்து கொள்ள
வசதியாய் இருக்கின்றது..

அத்தனைக்கும் ஆசைப்படு!!
அத்தனைக்கும் சேர்த்து
உன்மேல் ஆசைப்படுகிறேன்!!!!!

அப்பட்டமான பொய்யினை
நயமாய்ச் சொன்னால் அது கவிதை..
அப்பட்டமான அழகை நயமாய் வரைந்தால்
அத்தனையும் நீயாகிறாய்...

எதிர்பாராது கிடைக்கப்பெற்ற முத்தம்,
உன் காதலின் அடர்த்தி குறித்து
என் டைரி மொத்தத்திற்கும்
கவிதை எழுதி வைக்கின்றது...

எதை எழுதினாலும் கவிதை என்கிறாய்..
எனக்குத்தான் வாய்ப்பதில்லை
எழுதியவைகளை நானே ரசித்து திருப்திப்பட.....!!

Wednesday, February 2, 2011

மரணம்.....

பிரித்தெரியப்பட்ட
பொட்டலக்காகிதமாய்
இன்று- தெ௫வோரம்...

அந்த முகட்டில்
ஒரேபுறமாய் நீண்டநேரம்
படுத்தி௫க்க முடியவில்லை என்றாலும்
திராணியற்றுப் போயிருக்கின்றது
திரும்பிப் படுக்கவும்.,
தேம்பி அழவும்....

பிய்த்துத் தின்னும் தினவுகளுக்கு
மனம் என்றொன்றிருப்பதில்லை
மகனைப்போலவே!!

வாலிபங்கள் வேடிக்கைப்பார்க்கும் தெருவில்
வயோதிகம் மாறுவேடப்போட்டி நடத்துகின்றது

எந்த நிறமானாலும்
சுற்றியிருக்கும் மரப்பூச்சி ஒன்றுதான்
என்பதை கலர்பென்சில்கள் அறிவதில்லை..

யாரோ இரக்கப்பட்டு வைத்துப்போன
தேநீர்க்கோப்பைமேல் ஒன்று௬டி
"வாய்த்தல்" என்ற தலைப்பில்
பட்டிமன்றம் நடத்தி
வாய்க்கு வந்தபடிபேசித்தீர்க்கின்றன ஈக்கள்...

திறக்கப்படாத கதவிற்கு
எத்தனை சாவிகளிருந்து என்ன??

தி௫த்தி முடித்த வாழ்க்கைக்கு
மதிப்பெண் ஒட்டிச்செல்கின்றது
மரணம்.....

தேடியெடுத்து உ௫ட்டி
உதட்டில் ஒட்டவைத்துக்கொள்கிறேன்
சிறு புன்னகையை...
பாவம் ,
"சிரிச்சினே செத்துப்போயிருக்கான்யா"
என்று யாராவது சொல்லிப்போவார்கள்...Tuesday, February 1, 2011

இளைப்பாறல்!!

காய்ந்து உதிர்ந்த இலைகளை
ஒன்று சேர்த்து
பிரபஞ்சம் குழைத்து
வீடுக்கட்டிக் களைத்து
இளைப்பாறிச் செல்கின்றது
உனதெனவெனப் பெயரிடமுடியாக் காற்று !!