Pages

Wednesday, May 25, 2011

பிசாசு!!


விளக்ககணைத்துப்படுத்த
சொற்ப நொடிகளுக்குள்ளாகவே
சன்னல் திரைச்சீலைக்குப் பின்னாலிருந்தோ
அலமாரி டப்பாக்களுக்கு நடுவிலிருந்தோ வெளிப்பட்டு
அறை முழுக்க ஆக்கிரமித்து
சம்மணமிட்டமர்ந்திருக்கும்
இருளின் தோள்களில் கருப்பாய் வந்தமர்ந்தது
அவ்வுருவம்...

நாற்காலி நகர்த்துவதாகவும்
இங்கே வா.... என்று அழைப்பதாகவும்
அச்சுறுத்தத் தொடங்கியது அது..

விளக்கிடலாமா....
தைரியம் குறைவென்றாகிவிடுமோ
என்ற கூச்சத்தில் தாகமெடுத்தாலும்
சிறுநீர் கழிக்கத்தோன்றியும் எழத்தோணாது
இறுக்க மூடிக்கிடந்தன இமைகள்..

இருள் பிதுங்கிப்பிரசவித்த
அக்காலைப்பொழுதில்
விடுபட மாட்டாது கிடந்த
தூக்கத்தை சித்ரவதைக்கொலை செய்து விட்டு
லேசாய் விழித்துப்பார்த்தேன்...
வெளிச்சமாய் மாறிப்போயிருந்தது அவ்வுருவம்...

காரணம் கேட்க முயற்ப்படுமுன்,
காதருகே குசுகுசுதுப்போனது
இரவு வரைக்கும்
நீ தான் பிசாசென்று.....

Thursday, May 19, 2011

என் காதலனே!!!!


ஏதாவதொரு தோரணையில்
திடீரென விஸ்வரூபமெடுத்து
நெஞ்சம் முழுமைக்கும்
வியாபித்து நிற்கிறாய்

உன்னைப்பற்றி
யோசிக்கவே கூடாதென்பதை மட்டுமே
நாள் முழுக்க யோசித்துக் கொண்டிருக்கின்றேன்

என் சுவாசத்தின்
அருஞ்சொற்ப்பொருள் நீ!!
எல்லா கோடிட்ட இடங்களிலும்
உன் பெயரை மட்டுமே நிரப்புகிறேன்....

நான் மாதவியாயும் இருக்கச்சம்மதம்...
நொடிப்பொழுதேயாகிலும்
என் பெயரை மட்டுமே
உச்சரித்து உன் இதயம்
துடிக்குமானால்.....

இமைகளை பிடிங்கிக்கொண்டு
இமைக்கச்சொல்வது மாதிரியானது
உன்னைப்பற்றியதான கனவுகளை
களைந்து விட்டு வாழ்வதென்பது...

எதேச்சையாகவேனும்
தோன்றலாம்
என்றாவதொருநாள்
உன் கனவில்........நான்!!

உன் பார்வைப்பட வேண்டி
என் கவிதைகளெல்லாம்
அகலிகையாய் காத்துக்கிடக்கின்றன
என் கவிதைகளுக்குமேனும்
சாப விமோசனம் தா!!

நிலவு


பூமிமங்கை முகம் கழுவுமுன்
வானக்கண்ணாடியில் ஒட்டவைத்த
ஸ்டிக்கர் பொட்டு
"நிலவு"

Monday, May 16, 2011

என்னுள் நீ..உனக்கும் எனக்குமான
தூரங்களை பயணச் சீட்டாக்கி
சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்...
இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில்
இரட்டைக்குழந்தையாய் கர்ப்பமடைகின்றது என்னுள்
காதலும் காமமும்....

உன் வெட்கத்தில் தீக்குளித்தது
என் நாணம்
உன் புன்னகையில் மறுபிறப்பெடுக்கும்
நம்பிக்கையில் ...

தெருமுனை ஓரத்தில்
கிழிந்து விழுந்த உன் நிழலை
பிடித்தமர்ந்து மணிக்கணக்காய்
வெயில் காய்கின்றன
நினைவுகள்....

வித்தைகாட்டிக்கும்
தடுமாறவே செய்கின்றது வாழ்க்கை
என் வாலிபத்தைப்போல்...

உன் ஆசையின் கதவுகளுக்கு
வகை வகையாய் சாவிகள்..
திறக்கப்படாத கதவிற்கு
எத்தனை சாவிகளிருந்து என்ன?

புரிந்துக்கொள்
இருளில்தான் விழிகள் அகலப்படும்
எனதருகில் தான் உனக்கு
வாழ்க்கை வசப்படும்...!!

Monday, May 9, 2011

வினை!!


இரத்தத்தை மொத்தமாய்
பிழிந்து திரி ஏற்றுகிறாய்
கப கபவென பற்றி எரிகிறது
காதல்.

துரத்திவரும் உன் பார்வைகளுக்கு
பயந்துபோய் உயிரின் மீதேறி
ஒடுங்கி உட்கார்ந்து கொள்கின்றது
ஆசை

சீனத்துக் கடற்க்கரைகளின் பெயர்
கேட்டது மாதிரி பேந்த விழிக்கின்றது
உன் விழித்திரையில்
என்னைப்பற்றியதான
ஏக்கங்கள்

ஐன்ஸ்டீன் தத்துவத்தில்
அடங்காத மனம்
உன் ஐ விரல் தத்துவத்தில்
அடங்கி வழிகின்றது

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்-
எப்போது அறுவடை செய்யப்போகிறாய்
காதலை?