Pages

Tuesday, July 10, 2012

காட்சியும் காதலும்..!!

மருதாணியிட்டாய்...
நான் கேட்கவில்லை
கூடுதல் சிவப்பிற்கேனடி
என் இதயத்தை அறுத்தாய்...
உன்னை கேட்க முடியவில்லை .......

பட்டணத்திலிருந்து
ஊரு திரும்ப மணிக்கணக்காய்
கடந்து சென்ற பேருந்திற்காய் காத்திருக்கும்
படிக்கதெரியாத கிழவனைப்போல்
காத்திருக்கின்றது உன்னைப்பற்றியதான என் காதல்

குடையை திருப்பிப்போட்டு
நனைய வைத்து கைதட்டிச் செல்லும்
பலத்த காற்றாய் நீ கடக்கும் வினாடிகள்
உன் ஆசையில் நனைய வைத்து கைதட்டிச் செல்கின்றன

ஞாபகங்களின் மூலை முடுக்கெல்லாம்
அலைந்து திரிந்து கடைசியில்
நினைவுத் திரியில் மோதி
முட்டி இறந்தது
அதே ஆசை
பிறிதொருநாள்....

கனவுகளை ஓட்டைப்போட்டு
தாறுமாறாய் எழுதிச் சொருகினாய்
நம்மைப்பற்றியதான கவிதைகளை ...
விடிந்ததும்  எதுவும் புலப்படுவதில்லை
நீ வெள்ளை மையால் எழுதியவை.....!!

நான் ஒளிவது மாதிரி ஒளிந்துக் கொள்கிறேன்
நீ தேடுவது மாதிரி நடி என்று விளையாடிக்கொள்கின்றன
உன் இமைகளும் கருவிழியும்....
நான் சாவது மாதிரி செத்துக்கொள்கிறேன்
நீ வாழ்வது மாதிரி வாழ்ந்து விட்டு வா என்று
முனகிக்கொள்கின்றன....
என் கடைசி நொடிக் காட்சியும்
காதலும்....