Pages

Sunday, January 30, 2011

அரட்டை!!

அதிகம் கழுவப்படாது
வெறுமனே அலம்பி கவிழ்க்கப்பட்ட
தெருமுனை டீக்கடையின்
கண்ணாடி டம்ளருக்குள்
திட்டுத்திட்டாய் உறைந்தபடி
யார்யாருடைய தோவான உமிழ்நீர்கள்
அதிகாரம்
அரசியல்
ஆணவம்
அவலம் அழுகை என
பலவாறாகக் கதைத்த படியும்
கலாய்த்த படியும் நேரம் கழிக்கின்றன

Friday, January 28, 2011

பிரித்தல்!!

எப்படிச்சிந்தினாலும்
எஞ்சிவிடுகிறது நாசித்துவாரங்களில்
மூக்குச்சளியின் கடைசிச்சொட்டு!!!
சுவாசத்தின் வெப்பத்தில்
அது உலர்ந்து பொருக்காகி
மயிர்க்கால்களை இருக்கப்பிடித்தமர்ந்து
பிரித்தல் கடினமாகிவிடுகிறது
வார்த்தைகளினூடே கவிதையை
பிரித்தெடுத்தல் மாதிரி!!

Monday, January 24, 2011

விலைமாதுவின் அறை!!

அங்கொன்றும், இங்கொன்றுமாய்
இறைந்து கிடக்கும் கொண்டைஊசிகள்,
பாதி அணைந்த நிலையில்
கொசுவத்திச்சுருள்;
அதிகம் பிரசுரிக்கப்படும் பழைய நாளிதழ் ,
ரசமிழந்த சுவற்றுக்கண்ணாடி,
இப்போதோ அப்போதோ விழக் கூடும் மின்விசிறி,
எப்போதோ நின்றுபோன கடிகாரம்,
பெருக்கி கூட்டப்படாத தூசிகள்
கூட்டிப்பெருக்கப்படும் ஏளனங்கள்
என என்னென்னவோ கிடக்கின்றன
புதைக்கப்பட்ட சந்தோசத்தின் எலும்பு துண்டுகளாய்....

உதட்டுப்பூச்சி வண்ணக்கோல் நுனியில்
நேர்த்தியாய் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன
அடையாளங்கள் மறந்துபோன
எத்தனையோ பேர் உதடுகளின் நகல்கள்...

பசியின் ஒத்தடங்களில்
இலகுவாய் மறைந்து போகின்றது
குரூரத்தின் நகக்கீறல்கள் ...

மாதத்தின் மூன்று நாட்கள் மட்டும்
மூடியே கிடக்கின்றன
அவ்வப்போது திறக்கப்படும் கதவுகள் ..
மூச்சை முட்டும் தனிமையின் சீழ் நாற்றம்
அறையெங்கும் பரவிக்கிடக்கின்றது
கழற்றி விடப்பட்ட காலணிகள் அங்கலாய்க்கின்றன .....
சமுதாய நாற்றத்திற்கு இது எவ்வளவோ மேல்!!!

Tuesday, January 4, 2011

புறக்கணிப்பு!!

புணர்ந்து முடித்த
அடுத்த வினாடி
தேவதையின் எதிர்ச்சொல்லாய்
தெரிகிறேன் உனக்கு ...

வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான்
உண்டு முடித்துக் களைத்தவனாய் நீ!!

காலையின் அவசரக்கிளம்புதலில்
காபி கொடுத்த விதத்திலிருந்து
விளக்கணைத்துப்படுத்த தாமதம் வரைக்கும்
நீண்டு வந்த வன்மம்
புரண்டு படுத்த உன் தற்செயல் புறக்கணிப்பில்
கோரைப்பற்களுடன்
பூதாகரமாய் புலப்படுகிறதெனக்கு ..

எல்லாக் காமத்திலும்
ஆணிடம் ஏதோஒருபெண்தன்மையை
எதிர்பார்க்காத பெண் இல்லை;
பெண்ணிடம் ஏதோ ஒரு ஆண் தன்மையை
எதிர்பார்க்காத ஆண் இல்லை;

கண நேர இடைவெளிக்குப்பின்
காதருகே குசுகுசுத்துச்சொல்கிறாய்
ஆங்கிலத்தில்..
உன் காதலை.....

"கொடுத்தலில் தான் காதல்;
பெறுதலில் இல்லை"என்று
எப்போதோ சொன்ன உன் கவிதை
நினைவிற்கு வந்துப்போகின்றது
இருள் நிர்வாணப்பட்டு
வெளிச்சம் ஆவதற்கு முன்.....