Pages

Friday, May 17, 2013

எனக்குமொரு வார்த்தை!!



மீள முடியாக் கவிதைகளில் 
எழுத்துக்கும் எண்ணத்திற்கும் 
ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் 
நினைவுகளினூடே ரசனையாய் 
நகர்வலம் வருகிறாய் 

மறுதலிப்பின் வாசங்களினூடே 
காத்திருப்பின் குமட்டலில் 
சிறிது பெரிதாய் அளவுகளின்றி 
பரிதாப சில்லறை ஏந்தும் 
பிச்சைக்காரனின் தட்டில் 
பார்வைகளால் கலைத்துத் தேடுகிறேன்  
எனக்கும் வார்த்தை கிட்டுமோவென..

சிலாகித்து சிலிர்ப்பூட்டி நகரும் 
உருக்குலைந்து உடைந்த மேகத்தின் சாரலென 
குளிராய் ஆமோதிக்கிறாய்
கனவுகள் புணர்ந்து பெற்றெடுக்கும்  
வார்த்தைகளின் வெப்பத்தை...

சத்துணவுச் சோற்றை   
பிசைந்துப் பழகும் 
பள்ளிச் சிறுவனின் 
ஆதங்கத்தில் கடைசியாய் 
கண்டுணர்கிறேன்
தனியே காதலிக்கும் அலட்சியத்தை...

-புபேஷ்.

Thursday, May 16, 2013

நீயாகிவிட்ட நீ !!



தாளமாய்  படைக்கப்பட்டிருக்கிறாய் நீ!!..
சுருதியின் கடைசி எதிரொலியாய் 
நீள்கின்றன.....
உறக்கமில்லா இரவுகளில் 
அருகாமைக் கனவுகள்....

உன் இதயத்தின் வெற்றிடத்தில் 
புலப்படாதொரு புள்ளியில் 
ஏதேனும் ஒரு கோணத்தில் 
ஒளிந்திருக்கலாம்....; 
நானென அடையாளம் காணமுடியா என் நிழல். 

பேச எத்தனிக்கும் எல்லாத் தருணங்களிலும் 
பேசிக்கொண்டிருந்துவிட்டு 
நீ பேசவே மாட்டாயா  என்கிறாய்
பேந்த விழிக்கின்றன 
ஊமையாய் மாறி விட்டிருந்த  
மௌனங்கள்.....

ஏதேட்சையாய் "நா" கடித்ததில் 
ஆத்திகம் புகுத்தினாய் 
குறை பிரசவமாய் 
வலியுடன் பிதுங்கிப் பிறக்கின்றது 
கனவுகளில் நாத்திகம் 

நான்-நானாய் இருந்த போது 
நீ-நானானாய்.. 
நான் - நீயாக மாற நினைத்த போது 
நீ- நீயாகி விட்டாயே??

உன்  கடைசி நாட்களின்
கை யொப்பங் களிலேனும் 
வெளிப்படலாம் 
தடுமாற்றமாய்...... 
என்னைப்பற்றியதான ஞாபகங்கள்!!

என் மரணத்தின் கடைசிச்சொட்டு  
கண்ணீரில் நிச்சயமாய்  நீட்சித்திருக்கலாம் 
உன் நினைவுகளை விட்டுப் பிரியும் 
பிரியத்தின் அடர்த்தி....;

-புபேஷ்.