Pages

Wednesday, June 22, 2011

குழந்தையாக....


பால்யம் மென்று முடித்துத் துப்பும்
சக்கைகளே வாழ்க்கையின்
மிச்ச மீதிகள்...

அறியாதிருக்கும் போதும்
அறிந்து முடித்த போதும் மட்டுமே
முழுமையாய் சிரிக்கின்றான்
மனிதன்!!

அடையாளங்களின்றிப் பிரவேசிக்கும் போது
ஆகாயத்தின் அடுத்தப்பக்கம் கூட
ஆடு மைதானம் ஆகிவிடுகின்றது..
கட்டிய மணல் வீட்டிற்கு
அழைப்பின்றி வருகை தந்து
நட்சத்திரங்கள் ஓட்டிச்செல்கின்றது வானம்..
காற்றைக் கயிறு திரித்து
நிலவைக் கட்டி பூமிக்கு இழுத்துவர
கை சேர்க்கின்றது கடல்...

அடையாளங்கள் முகவரியானபின்.......
அடுத்த வீட்டு வளர்ப்பு நாய் கூட
அனேக நேரங்களில்
அனிச்சையாய்ப் பார்த்து குரைக்கின்றது...

தாமதங்களோ,
அவசரங்களோ
அகங்காரங்களோ
ஆர்ப்பரிப்புகளோ
என எதுவுமே புலனாவதில்லை குழந்தைக்கு...

பசிக்கும்,
வலிக்கும்,
மட்டுமே அழத்தெரியும் குழந்தைக்கு..
நம்மைப்போல் எல்லாக்காரணங்களுக்கும்
கண்களில் சிறுநீர் கழிப்பதில்லை....

கையில் கிடைத்த பொம்மையை
தேவதையாக்கி.,
புரிபாடாத பாஷைகளில்
மணிக்கணக்கில்
பேசிச்சிரிக்கின்றது அதனுடன்....
பொம்மைகளுக்குப் புரியும் மொழி
ஏனோ மனிதத்துக்கு
புரிபடுவதில்லை...

களைத்துத் திரும்பும் அப்பா,
அம்மாவை எப்படி மிரட்டுவார்...
என்பதற்கு.,
அழகாய் விழி உருட்டி
தத்ரூபமாய் நடித்துக்காட்டுகிறது
குழந்தை....

நடிக்கத் திராணியற்று.,
ஒட்டு மொத்தப்பொய்களும்
நிறமிழந்து வெளிறிப்போய் கிடக்கும்
அச்சமயத்தில்......,
நானும் ஆசைப்படுவேன்
மீண்டும் "குழந்தையாக".....!!

Sunday, June 12, 2011

இயலாமை...


கை கொட்டிச்சிரிக்கும்
மானத்தின் மார்புக்காம்புகளிலாவது
பால் சுரக்கட்டும்...
என் குழந்தையின் பசியாற்ற.,
என்று,
முனகியபடியே
முடங்கிக்கொள்கின்றது
இவளின் இயலாமை..

Saturday, June 11, 2011

கதை...



என் பிராத்தனைகளில்
நீ கடவுளாகிறாய்....
நிறைவேறா வேண்டுதல்களுடன்
ஏமாற்றமாய் ஆசை...

உன் நிழலையும்
இருள் என்கிறாய் நீ...
இருளையும் நிழலென்கிறேன் நான்...
குருடனாய்- பேந்த பேந்த விழிக்கின்றது
வாழ்க்கை...

உனக்கு நினைவிருக்கின்றதா என்று
தெரியவில்லை
உன் கழுத்துச் சங்கிலியின்
இறுக்கத்தைவிட என் அருகாமையைதான்
அதிகம் நேசிக்கிறேன் என்று நீ
கவிதை சொன்னதை....

வேறோருவனுடனான
உன் நிர்பந்தச் சம்மதத்திர்க்குப்பின்
என் தயக்கமும்
உன் மௌனமும்
கட்டிப்பிடித்தபடி தலைக்கீழாய் முட்டி
தற்கொலை செய்துக்கொண்டன......
உடன்கட்டை ஏறும் நோக்குடன்
காத்துக்கிடக்கின்றது காதல்....

பாதியாய் எரிந்து அணைந்த
கொடுக்கமுடியாக் காதல் கடிதங்கள்
உன் வீட்டின் முல்வேளிக்காம்புகளின்
இடுக்கில் மாட்டிக்கொண்டு
இரத்தம் கக்கியபடியே
என் கனவுகளைப்பற்றி
கதை சொல்லிப்போகின்றது....