உன்னை நோக்கிய
நெடுந்தூர ஓட்டத்தில்
காதறுந்த வலதுக்கால் செருப்பு
உன் கடைசி நொடிக்காத்திருப்பின்
பெருமூச்சுடன் விசும்பி அழுகின்றது...
கவிதை ஒன்றை எழுதி நீட்டினேன்
காதல் எனப் பெயரிட்டாய் அதற்க்கு....
என் காதலை மொத்தமாய் எழுதி நீட்டுகிறேன்....
கூச்சமே இல்லாமல் கவிதை எனப்பெயரிடுகிறாயே???.
என் ஆசைகள் அனைத்தையும் சேர்த்து
சிறையில் அடைத்து வாழ்நாள் முழுக்க
உன்னை மட்டுமே பார்த்துச் சாகச்சொன்ன
நீதிபதி
உன் கண்கள் தான்....
காற்றின் சலசலப்பில்
நெடுநாட்களாய்
பறவையாய் பறக்க நினைத்து
மரத்தை திட்டித்தீர்த்த இலை ஒன்று.,
கடைசியில்
விடுபட்டு, பறந்து, உதிர்ந்து
சருகாய்க்கிடந்தவுடன்
காற்றைச்சபிக்கின்றது
என் நினைவுகளைப்போல்....
இணைபிரிந்த தரிசுநிலத்தின்
வெடிப்புற்றுக்கிடக்கும்
இரு உதடுகளுக்கு நடுவே
கூச்சமே இல்லாமல்
முத்தமிட்டுச்செல்கின்றது மழை....
காத்துக்கிடந்த நம் காதலுக்கு நடுவே
நீ கல்யாண அழைப்பிதழை
நீட்டியதுப்போல்..
உன் பார்வைகளின்
மகுடிக்கு தலையசைக்கும்
காதுகேளாத என் இதயத்திற்கு
கல்யாண ராகமும் ஒன்று தான்
முகாரி ராகமும் ஒன்று தான்....
மேகம் வானத்தின் அழுக்கென்றால்
என் ஞாபகங்களை என்னவென்பாய்?
கொன்றால் பாவம்
தின்றால் தீருமாமே...!!
காதலை அறுத்துக்கொன்றுவிட்டு
காதலையே திங்கப்போகின்றாயா??
Sunday, October 9, 2011
Monday, September 12, 2011
மாற்றம்..

எப்போதும் போலவே
என்னை நீயாய் காட்டுகின்றது
இந்நிலைக்கண்ணாடி...
தன்னை வேறோன்றதாய் காட்டிக்கொள்வதில்
யாருக்குத்தான் அங்கலாய்ப்பில்லை..?
குறிசொல்லும் ஜோசியக்காரனின்
எந்த வார்த்தையும் செவிக்குள் ஏறவில்லை...
உன்னைக்குறித்து பேச்செடுக்கும்வரை...
நீ கிள்ளி வைத்துச்சென்ற
பேருந்து நிறுத்த மரத்தில்
மணிக்கணக்காய்
உன் நகத்தின் வாசம் முகர்கிறேன்...
உன் அழகால்
நான் மயங்கவில்லை
உன்மேலுள்ள என் மயக்கத்தால்
நீ கூடுதல் அழகாகிறாய்...
பல்லாங்குழிக்கற்க்களாய்
அடுக்கி வைக்கப்பட்ட என்
ஆசைகளின் முதலாவதாய்
மேலே நிற்கும் ஒன்று
தடுமாறி விழுந்து கடைசியாய் மாறிப்போனது
நீ எதுவும் பேசாமல் கடந்துச்சென்ற அவ்வினாடி...
Sunday, July 24, 2011
மௌனம்...

விபூதி பூசி மரக்கச் செய்து விட்டு
சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல
உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து
உன்னைப்பற்றியதான கனவுகளை
குத்தி விட்டுச் செல்கின்றது காதல்....
தாவணியின் ஓரங்களில்
நீ முடிந்து வந்துக் கொடுத்த
கல்யாண வீட்டு மைசூர் பாக்கு
பல்லிடுக்கில் சிக்கிக்கொண்டு
நெடுநேரமாய் உன் பிரியத்தை
"வலி" யுறுத்திக் கரைந்தது....
சலனமின்றி
என் நிழலின் காதருகே குனிந்து
ரகசியமாய் எதோ சொல்லிப்போகும் உன் மௌனம்
ரம்மியமான ஓராயிரம்
இசைத்தட்டுகளை என் இதயத்தின்
செவிட்டு அறைகளில் மீட்டிச்செல்கின்றது...
நிழலுக்கும் பிம்பங்களுக்கும்
வித்தியாசம் புரிபடாது போன
அத்தருணத்தில்
பிம்பங்களுக்குள் வெளிப்படுவதாய் நினைத்த
உன் தயக்கம் குழம்பிப்போய்
என் நிழலுக்குள் வெளிப்பட்டு நீள்கின்றது
முற்ப்பிறவியில்,
இதைவிடவும் அதிகமாய்
உன்னைக்காதலித்திருக்கக்கூடும்...நான்
உன்மேல் இன்னும் பைத்தியம்
போதாதென்று இழுத்தடிக்கின்றதோ
காதல்...?
நான் சந்தர்ப்பவாதிதான்...
நீ அருகிலில்லாத சமயங்களில்
உன் நினைவுகளை மட்டும் காதலிக்கிறேனே..!!
தயவுசெய்து சொல்லிச்செல்
என்ன விலைக்கு விற்றாய்
என்னால் வாங்கமுடியாத
அந்த இதயத்தை ????
Wednesday, June 22, 2011
குழந்தையாக....

பால்யம் மென்று முடித்துத் துப்பும்
சக்கைகளே வாழ்க்கையின்
மிச்ச மீதிகள்...
அறியாதிருக்கும் போதும்
அறிந்து முடித்த போதும் மட்டுமே
முழுமையாய் சிரிக்கின்றான்
மனிதன்!!
அடையாளங்களின்றிப் பிரவேசிக்கும் போது
ஆகாயத்தின் அடுத்தப்பக்கம் கூட
ஆடு மைதானம் ஆகிவிடுகின்றது..
கட்டிய மணல் வீட்டிற்கு
அழைப்பின்றி வருகை தந்து
நட்சத்திரங்கள் ஓட்டிச்செல்கின்றது வானம்..
காற்றைக் கயிறு திரித்து
நிலவைக் கட்டி பூமிக்கு இழுத்துவர
கை சேர்க்கின்றது கடல்...
அடையாளங்கள் முகவரியானபின்.......
அடுத்த வீட்டு வளர்ப்பு நாய் கூட
அனேக நேரங்களில்
அனிச்சையாய்ப் பார்த்து குரைக்கின்றது...
தாமதங்களோ,
அவசரங்களோ
அகங்காரங்களோ
ஆர்ப்பரிப்புகளோ
என எதுவுமே புலனாவதில்லை குழந்தைக்கு...
பசிக்கும்,
வலிக்கும்,
மட்டுமே அழத்தெரியும் குழந்தைக்கு..
நம்மைப்போல் எல்லாக்காரணங்களுக்கும்
கண்களில் சிறுநீர் கழிப்பதில்லை....
கையில் கிடைத்த பொம்மையை
தேவதையாக்கி.,
புரிபாடாத பாஷைகளில்
மணிக்கணக்கில்
பேசிச்சிரிக்கின்றது அதனுடன்....
பொம்மைகளுக்குப் புரியும் மொழி
ஏனோ மனிதத்துக்கு
புரிபடுவதில்லை...
களைத்துத் திரும்பும் அப்பா,
அம்மாவை எப்படி மிரட்டுவார்...
என்பதற்கு.,
அழகாய் விழி உருட்டி
தத்ரூபமாய் நடித்துக்காட்டுகிறது
குழந்தை....
நடிக்கத் திராணியற்று.,
ஒட்டு மொத்தப்பொய்களும்
நிறமிழந்து வெளிறிப்போய் கிடக்கும்
அச்சமயத்தில்......,
நானும் ஆசைப்படுவேன்
மீண்டும் "குழந்தையாக".....!!
Sunday, June 12, 2011
இயலாமை...
Saturday, June 11, 2011
கதை...

என் பிராத்தனைகளில்
நீ கடவுளாகிறாய்....
நிறைவேறா வேண்டுதல்களுடன்
ஏமாற்றமாய் ஆசை...
உன் நிழலையும்
இருள் என்கிறாய் நீ...
இருளையும் நிழலென்கிறேன் நான்...
குருடனாய்- பேந்த பேந்த விழிக்கின்றது
வாழ்க்கை...
உனக்கு நினைவிருக்கின்றதா என்று
தெரியவில்லை
உன் கழுத்துச் சங்கிலியின்
இறுக்கத்தைவிட என் அருகாமையைதான்
அதிகம் நேசிக்கிறேன் என்று நீ
கவிதை சொன்னதை....
வேறோருவனுடனான
உன் நிர்பந்தச் சம்மதத்திர்க்குப்பின்
என் தயக்கமும்
உன் மௌனமும்
கட்டிப்பிடித்தபடி தலைக்கீழாய் முட்டி
தற்கொலை செய்துக்கொண்டன......
உடன்கட்டை ஏறும் நோக்குடன்
காத்துக்கிடக்கின்றது காதல்....
பாதியாய் எரிந்து அணைந்த
கொடுக்கமுடியாக் காதல் கடிதங்கள்
உன் வீட்டின் முல்வேளிக்காம்புகளின்
இடுக்கில் மாட்டிக்கொண்டு
இரத்தம் கக்கியபடியே
என் கனவுகளைப்பற்றி
கதை சொல்லிப்போகின்றது....
Wednesday, May 25, 2011
பிசாசு!!

விளக்ககணைத்துப்படுத்த
சொற்ப நொடிகளுக்குள்ளாகவே
சன்னல் திரைச்சீலைக்குப் பின்னாலிருந்தோ
அலமாரி டப்பாக்களுக்கு நடுவிலிருந்தோ வெளிப்பட்டு
அறை முழுக்க ஆக்கிரமித்து
சம்மணமிட்டமர்ந்திருக்கும்
இருளின் தோள்களில் கருப்பாய் வந்தமர்ந்தது
அவ்வுருவம்...
நாற்காலி நகர்த்துவதாகவும்
இங்கே வா.... என்று அழைப்பதாகவும்
அச்சுறுத்தத் தொடங்கியது அது..
விளக்கிடலாமா....
தைரியம் குறைவென்றாகிவிடுமோ
என்ற கூச்சத்தில் தாகமெடுத்தாலும்
சிறுநீர் கழிக்கத்தோன்றியும் எழத்தோணாது
இறுக்க மூடிக்கிடந்தன இமைகள்..
இருள் பிதுங்கிப்பிரசவித்த
அக்காலைப்பொழுதில்
விடுபட மாட்டாது கிடந்த
தூக்கத்தை சித்ரவதைக்கொலை செய்து விட்டு
லேசாய் விழித்துப்பார்த்தேன்...
வெளிச்சமாய் மாறிப்போயிருந்தது அவ்வுருவம்...
காரணம் கேட்க முயற்ப்படுமுன்,
காதருகே குசுகுசுதுப்போனது
இரவு வரைக்கும்
நீ தான் பிசாசென்று.....

