Pages

Thursday, February 21, 2013

கண்களில்!!



(தருமபுரி குடிசை எரிப்பில் எரிந்த ஒரு காதல்)
 

முதல்முதலாய்
நம் பார்வைகள் எதேச்சையாய் பார்க்க நேரிட்டபோதே,
உன் விழிகளை எச்சரித்திருக்க வேண்டும் நான்...
மறுபடியும் பார்க்காதே என்று !!

கண்ணாடிக்கு பதிலாக
என் கண்களில் உன்னை பார்த்துக்கொள்ள
ஆரம்பித்துவிட்டாய்...

பிறிதொரு நாள்
பரவசமாய் உன் கண்களுக்குள் என்னையும்
குடிவைத்தாய்...

நான் ஆகாயமானேன்.,
நீ பார்வை ஆனாய்..
கண்களின் நீரானேன் நான்..
அதில்  நீந்துபவளானாய் நீ !!
மொழிகளுக்குள் வசப்படாத காதல்
உன் விழிகளுக்குள் அகப்பட்டுக்கிடந்தது.

ஒன்றிலிருந்துதான் மற்றொன்று தோன்றுமென்பது விதி.
எனக்கும் அப்படித்தான்..
உன் கண்களிலிருந்துதான் என் உலகமே!!

இமைகள் மூடாதிருக்கும்வரை
உன் கண்களிலிருந்து தவறி விழுந்து விடுவேனோ
என்ற அச்சம்தானுனக்கு எப்போதும்... 
ஒரே கண்களில் இரு கனவுகளாய்
கட்டிபிடித்துக் கிடந்தோம்..
ஒரே உடலில் இரு ஹோர்மோன்களாய்
உயிரை வலம் வந்தோம்...

கடைசியில் காதலை உன்னோடு சேர்த்துக்கட்டி
சாதித் தீ எரித்ததடி...ஒருயிராய் இருந்த உன்னை!
நம் ஞாபகங்களின் நினைவுத்தீ  எரித்து முடித்ததடி
மீதமிருந்த என்னை!!

வாழ்கையின் பாதையெல்லாம்
காண்பித்துக்கொடுத்த உன் விழிகளுக்கு
ஏனோ..பாதங்களை காண்பித்துக் கொடுக்க தோன்றவில்லையே!!

நீ என்னை "வைத்திருந்தாய்" என்றே
இச்சமூகம்  சொல்லும்...
அவர்களுக்கு நிச்சயம் தெரியாது....,
உன் கண்களில் தானென்பது!!

-புபேஷ்.