Pages

Sunday, March 6, 2011

காதலாகி.....!!

"மாம்ஸ்"......
ரெண்டு டீ... ஒரு பன்னு, ரெண்டு கிங்க்ஸ்..கணக்குல எழுதிக்கோங்க..!!
என்று சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் சட்டென நண்பன் தினேஷோடு டீக்கடையின் உள்ளே நுழைந்தான் வெங்கி என்கிற வெங்கடேஷ்.
டேய்.. டேய்...உள்ள செல்விக்கு பூச போட்டிருக்குடா...போட்டோக்கு பக்கத்துல போனீங்க......பிச்சுடுவன் என்று கனத்த குரலில் சொன்னார் மாம்ஸ்.
அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு நேர் எதிராய் ரோட்டைத்தாண்டிப்போனால் ஒரு வளைவில் அமைந்திருக்கும் மாம்ஸ் டீக்கடை. கடைக்கு பேர் என்னவோ "சக்தி" டீ ஸ்டால் என்பது தான். ஆனால் எல்லோருக்கும் மாம்ஸ் கடை என்று தான் பிரச்சித்தம். பொரம்போக்கு இடத்தில் தென்ன ஓலைகலால் கட்டி பார்டிசன் ஏற்படுத்தி இருப்பார் மாம்ஸ். வியாபாரம், வீடு என எல்லாமே அந்த ஓலைக்குடிசை தான் அவருக்கு. மத்தியம் என்றால் வெரைட்டி ரைஸ், வடை சேர்த்து கிடைக்கும் . அடுத்த சந்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் இருப்பதால் திங்கட்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். மற்றபடி டீ தான் மெயின் பிசினஸ். பிளஸ் ஒன், பிளஸ் டூ பள்ளி மாணவர்கள், படித்து முடித்தவர்கள் என எல்லோருக்கும் மீட்டிங் ஸ்பாட் இங்குதான். "தம்" அடிக்க வசதியாய் இருப்பதால் முக்கால் வாசி வாடிக்கையாளர்கள் இளைஞர் பட்டாளம் தான்.

டாய் வெங்கி.....!!
டீ போட்டு எவ்ளோ நேரம் ஆகுது....., ஒரு ஆள் எடுத்துனு வந்து குடுக்கணும்டா உங்களுக்கு என்றுஅலுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தவர், டேய்.. டேய்..அப்பவே சொன்னேன்ல...போட்டோ பக்கத்துல ஊதாதீங்கன்னு...இதுக்கு தான்டா யாரையும் உள்ள விடக்கூடாதுங்குறது என்று விரட்டினார். இப்போ யார் போட்டோ மேல உட்டது.. ..நல்லா பார்த்துட்டு பேசுங்க....!
எப்போ பாரு நொய் நொய் ன்னிட்டு....என்று திருப்பி கடிந்தான் வெங்கி ..உள்ளே தம் அடிக்க அனுமதிக்கும் மாம்ஸ்.., சக்தி போட்டோக்கு பக்கத்தில் நின்றால் கூட திட்டுவார்.
சக்தி அவரின் மூத்தமகள். மூன்று வயதாகும் போது ஆர்லிக்ஸ் பாட்டில் உடைந்து வயிற்றில் குத்தி இறந்து போனதாக சொல்லியிருக்கிறார். சக்தி பற்றி யாராவது பேச்செடுத்தாலே அவ கலரு இந்த ஏரியாலே யாருக்கும் இல்ல தெரியுமா என்பார். கடைக்கு கூட சக்தியின் பெயர் தான். நேற்றைக்கு செல்விக்கு திதி என்பதால் பூசை போட்டு புது மாலை வாங்கி மாட்டியிருந்தார் மாம்ஸ். என்னதான் விரட்டினாலும் மாம்ஸ்க்கு வெங்கடேஷ் மேல் தனிப் ப்ரியம் உண்டு. போன மாதம் நாலு நாள் ப்ராக்டிகல்க்கு வராம லீவ் போட்டதுக்கு அப்பாவ கூட்டி வர சொல்லி ஹெட் மாஸ்டர் துரத்திய போது கூட அண்ணனாக போய் நின்றவர் மாம்ஸ் தான். நல்லா படிக்கிற பையனே இப்படி பண்ணா அவன பார்த்து நாலு பேரு கத்துக்க மாட்டாங்க? கொஞ்சம் புத்தி மதி சொல்லுங்க சார்..என்று ஹெட் மாஸ்டர் சொன்னதிலிருந்து கூடுதலாக திட்டு விழும் வெங்கிக்கு.
வெங்கி யின் கிராமம் டவுனிலிருந்து 7 கிமீ போகவேண்டும். , வீட்டுக்கு மூத்த பையன். தங்கைகள் இரண்டு பேர் அவனைப்போலவே ஸ்கூலில் படிக்கிறார்கள் . அவன் அப்பா பத்திரம் எழுதுபவர். . அவ்வளவு ஒன்னும் பெருசா வருமானம் இல்லை. மூன்று பிள்ளைகளை படிக்கவைக்கவும், துணிமணி வீட்டுச்செலவு என வரும் வருமானம் சரியாகப்போய்விடும். ஒரு லொட லொட டிவிஎஸ் 5௦ வேறு வைத்திருக்கிறார். அதிலும் சமீப காலமாக ப்ரசர் கூடிப்போய் அவதிப்படுகிறார். மகன் 10 ஆம் வகுப்பில் 400 க்கு மேல் மார்க் எடுத்ததை பார்த்து, டவுன்ல போடுங்க சார்...டியூசன் வசதி இருக்கு.. நல்லா மார்க் எடுப்பான், என்ன அடிக்கடி பஸ் தான் இருக்கே நம்ம ஊருக்கு பின்ன என்ன யோசிக்கறீங்க என்ற நண்பர்களின் பேச்சை கேட்டு டவுனில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார் . சுற்று வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயர் உண்டு. யார் வம்பு தும்புக்கும் போக மாட்டார். தானுண்டு தன வேலை உண்டு என்றிருப்பவர். ஞாயிற்று கிழமைகளில் எப்போவாவது குடிப்பார். அதுவும் வீட்டுக்கே வாங்கி வந்து மாடி மேல் போய் அமர்ந்து பசங்களுக்கு தெரியாம குடித்து விடுவார். மகனை டவுனில் சேர்த்ததிலிருந்து அந்த பழக்கத்தையும் நிறுத்திவிட்டார். அவரின் உலகம் இப்போது குடும்பம்,பிள்ளைகளின் படிப்பு என்றாகிவிட்டது.
அம்மாவோ, மோல்டிங் பலசாயிடிச்சு, ஒரு வண்டி மணல், பத்து மூட்ட சிமென்ட் வாங்கி கப்பி தட்டினால் நல்லா இருக்கும், மழை வந்தால் மேற்கு பக்கம் ஒழுகுதுங்க என்றும்...., ஆட்டி, ஆட்டி கையெல்லாம் வலிக்குது....., லோன்லயாவது ஒரு கிரைண்டர் வாங்கிப்போட்டால் தேவலை என்றும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். எல்லாவற்றிற்கும் சேர்த்து வெங்கியின் மேலுள்ள கனவுகளை கை காண்பிப்பார் அப்பா......
ஆயிடுச்சுடி..., இன்னும் ஒரு மூணு நாலு வருஷம் பொறுத்துக்கோ..,ஏதாவதொரு நல்ல வேலையில சேர்ந்துடுவான் உம்மகன். அப்புறம் எல்லாம் சரியாயிடும் என்பார் அப்பா.

வெங்கிக்கும் எப்படியாவது எஞ்சினியர் ஆக வேண்டும் என்ற லட்சியம் உண்டு. விடுமுறை நாட்களில் சிறிது நேரம் அதிகமாக தூங்கினாலும்.... , அந்த பால்காரம்மா பையனுக்கு எங்கோ வாரனாசியில இடம் கிடச்சிருக்காம்....... புள்ளைங்க எப்படி எல்லாம் படிக்குதுங்க என்று உதாரணம் காண்பித்து ஜாடை மாடை யாகப் பேசுவார் அப்பா . அதற்க்கு மேல் தூக்கம் பிடிக்காது வெங்கிக்கு. லீவ் கீவ்...ன்னிட்டு பசங்களுக்கு வேல வைக்காதடி !! படிக்கட்டும்..... எதாவது வேலைன்னா என்கிட்டே சொல்லு....! என்று சின்ன சின்ன வேலைகலை கூட இழுத்துப்போட்டு செய்வார் அப்பா. பள்ளி நாட்களில் காலை 7 மணி பஸ் பிடித்தால் இரவு டியூசன் முடிந்தப்பின்பு, பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் மணி 10 ஆகிவிடும். பின்னர் சாப்பிட்டு முடித்து புத்தகம் எடுத்து வைத்தால் தூக்கம் தான் வரும். அம்மாவுக்கு வெங்கியின் மேல் ரொம்ப பாசம். வெங்கியும் பள்ளியில் நடப்பது, டியூசனில் நடப்பது, நண்பன் தினேஷ் என்று எல்லாம் பகிர்ந்துக்கொள்வான் . கதை கேட்பது மாதிரி அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்வாள் அம்மா. அம்மா அடிக்கடி சொல்வது., அந்த தினேஷ் கூட அதிகம் வச்சுக்காத ராசா...அவங்கெல்லாம் பணக்கார வூட்டு பசங்க. அவங்களுக்கு என்ன எப்படியும் மேல வந்துடுவாங்க...நமக்குதான் நாதி இல்ல என்று அடிக்கடி சொல்வாள். ஒரு நாள் சட்டையை துவைக்கும் போது சிகரட் தூள் இருந்ததை பார்த்து விட்டு தாண்டவமாடி விட்டாள். உங்கப்பாவுக்கு சொன்னால் உன்ன ஸ்கூல்க்கே அனுப்பமாட்டார் தெரியும் இல்ல...குடுக்குற காசையெல்லாம் இத தான் பண்ணிட்டு திரும்புறியா...என்று கத்து கத்தென்று கத்திவிட்டாள். இருந்தாலும், காலையில் பள்ளிக்கு கிளம்பும்போது மதியம் எங்காவது நல்லா சாப்புட்டுக்கோப்பா என்று 30 ரூபாய் தந்தனுப்புவார். வெங்கிக்கு அதை வாங்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலோங்கும்.

வெங்கியும் நன்கு படித்துக்கொண்டு தான் இருந்தான். +2 வந்த பின்பு வெளியில் கணக்கு டியூசன் சேர்ந்தான். ஸ்கூல் முடித்த பின் ஐந்தரை மணிக்கு டியூசன் தொடங்கும். மற்ற பள்ளி மாணவர்களும் அங்கு வருவர். டயூசனாக இருந்தாலும் வாத்தியார் கொஞ்சம் கறார் பேர்வழி. அவ்வப்போது பார்முலா கேட்டு சொல்லாவிட்டால் அசிங்கப்படுத்திவிடுவார். பெண் பிள்ளைகளும் இருப்பதால் அதற்க்கு பயந்தே மனப்பாடம் செய்து விடுவார்கள் மாணவர்கள். அந்த டியூசனில் தான் அவளை முதல் முறையாகப்பார்த்தான். அதுவரைக்கும் அவன் பார்த்திடாத அழகி யாகத்தெரிந்தாள் அவள். அன்றிலிருந்து கடைசி வரிசையில் தான் உட்காருவான். அங்கிருந்து அவள் நன்கு தெரிவாள். பாதி நேரம் அவளை பார்ப்பதிலேயே டியூசன் முடிந்து விடும். அவனால் அவனை கட்டுபடுத்த முடியவில்லை. என்னென்னமோ செய்தது. அவள் பார்வையில் படவேண்டும் என்பதற்காகவே டியூசன் முடிந்தவுடன் விறு விறுவென்று படி விட்டெறங்கி முதல் ஆளாய் கேட் அருகில் வந்து நிற்பான். கடக்கையில் அவள் பார்க்கும் அந்த எதேச்சைப்பார்வையை டிசைன் டிசைன் ஆக மாம்ஸ் கடை மீட்டிங்கில் நண்பர்களோடு சொல்லி மகிழ்வான்.

வெங்கியின் நெருங்கிய நண்பன் தினேஷ். . பள்ளி முடிந்ததும் அரைமணி நேரத்தில் யுனிபார்ம் மாற்றி மாம்ஸ் கடையில் ஐக்கியமாகிவிடுவான் . வெங்கி சொல்வதர்க்கெல்லாம் ஒத்து ஊதுபவன் தினேஷ். பெரும்பாலான சமயங்கள் இருவரும் ஒன்றாகவே திரிவார்கள். பட்டனை கழற்றிவிட்டு காலரை பின்னே தூக்கி விட சொல்லி கொடுத்தவனும் இந்த தினேஷ் தான். மாப்ள....எங்க ஏரியா செந்தில் அண்ணா எனக்கு தெரியும் டா. அவரு பெரிய ரவுடி. என்னானாலும் பார்த்துக்கலாம் டா என்று உசுப்பேத்தி விட்டு வெங்கிக்கு தைரியம் வழங்குவான். அவன் சைக்கிளில் தான் டியூசன் செல்வார்கள். டியூசன் முடிந்து பஸ் ஸ்டான்ட் வரைக்கும் வந்து ஏத்தி விட்டுவிட்டு போவான் தினமும். தினேஷ்க்கு அந்த அளவு படிப்பு வராது. வெங்கியை நம்பி காலம் நகர்த்துபவன் . ஸ்கூல் பரீட்சை யிலும், டியூசன் பரீட்சையிலும் வெங்கிக்கு பின்னாலேயே அமர்ந்து காண்பிக்கச்சொல்லி நச்சரிப்பான்.

அன்று மாம்ஸ் கடையில் அமர்ந்து வெங்கியை ஈர்த்த அந்தப் பெண்ணைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்..டே மாப்ள..!நான் பிளஸ் ஒன் ல இருந்து அங்க டியூசன் போறேண்ட....அவள பார்த்தது இல்ல..அவளும் உன்ன மாதிரி இந்த வருஷம் தான் புதுசா டியூசன் சேர்ந்திருக்கா.. ஏதோ ஒரு தனியார் ஸ்கூல்ல இங்கதான் படிக்கணும்... விடுறா கண்டு புடிச்சிடலாம் என்றான் தினேஷ். என்ன பிரச்னைன்ன அவ அப்பன்காரன் பைக் ல வந்து கூட்டிட்டு போயிடுறான்...... இல்லனா., பின்னாடியே போய் எங்க வீடுன்னு தெரிஞ்சிக்கிடலாம்.... தெரியாமயா போயிடும். பார்த்துக்கலாம் என்று சமாதானம் சொன்னான்.

அப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது.
ஏன்டா வெங்கி......நீயும் பார்த்துனே தான் இருக்கிறே ஒழிய போய் பேசமாட்டேங்குற ,எங்களைத்தான் பைத்தியக்காரன் ஆக்கிட்டு இருக்க...நீ எப்போ பேசி.., எப்போ கரெக்ட் பண்ணறது.....அதுக்கெல்லாம் உள்ள இருந்து வரணும் மாப்ள...எல்லா வெனையமும் பேச தெரியுது உனக்கு ..இது தெரியில...என்று கிண்டலடித்தான். ஆனா ஒன்னுடா.. உன்ன வாத்தியார் எழுப்பி கேள்வி கேட்டும் போதெல்லாம் ஒரு சைசா தான் பார்க்குறா. அவளைத்தான் வாத்தி எழுப்பவே மாட்டேங்குறார். இல்லனா பேராவது தெரியும் என்றவன், டே..அடுத்த வாரம் டியூசன்ல பரிட்சடா. எப்படியும் பேப்பர் குடுக்கும் போது கூப்புட்டு தானே ஆகணும்.அப்போ தெரியும் விடு என்றான். இல்லடா...எனக்கும் பேசணும்னு தான் இருக்கு...ஆனா பயமா இருக்கு..எப்போ பாரு ரெண்டு பொண்ணுக அவ கூடயே இருக்காளுக ....தனியா சான்ஸ் கிடைக்க மாட்டேன்குதுடா இன்னைக்கு பாரு..என்ன ஆனாலும் சரி. பேசுறேன் டா...என்று ஆசுவாசமாய் சொன்னான் வெங்கி......
சொன்னது மாதிரியே டியூசன் முடிந்தவுடன் படி இறங்கி கீழே வந்து நின்றான். எல்லாத் தெய்வங்களையும் மொத்தமாய் கும்பிட்டு செருப்பு கழற்றிவிடும் இடத்தருகில் நின்று கொண்டிருந்தான் வெங்கி. நெஞ்சமெல்லாம் பட பட வென்றிருந்தது. எச்சில் மென்று முழுங்கிக்கொண்டிருந்தான். அன்றென பார்த்து கடைசியாகத்தான் வந்தாள் அவன் தேவதை. கூட இரண்டு தோழிகளும் வந்தனர். இவன் நிற்பதை கண்டு கொஞ்சம் பதட்டம் இருந்தது அவளுக்கும். குசுகுசுத்தனர் தோழிகள். அவளின் செருப்பை தேடி எடுத்து அணிவதர்க்குள் நெருங்கி விட்டான். பேச்சே வரவில்லை. ம்ம்ம்..ம்ம்ஹூம்....ஹாய்....நான் வெங்கடேஷ்...என்று தன்னை அறிமுகப்படுத்தினான். அதற்க்கு ஒன்றும் பெரிதாக ரியாக்சன் காட்டவில்லை அவள். அவளின் பயம் எல்லாம் வெளியே காத்திருக்கும் அப்பா பார்த்து விடுவாரோ என்பதிலேயே இருந்தது. எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இவனே தொடர்ந்தான். நான் போன வாரம் ரெண்டு நாள் டியூசன் வரல, கொஞ்சம் நோட் குடுத்தீங்கன்னா காப்பி பண்ணிட்டு நாளைக்கு வரும் போது குடுத்துடறேன் என்றான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அடுத்தவாரம் எக்ஸாம் இருக்கு. படிக்கணும் என்றாள். இல்ல நாளைக்கு கண்டிப்பா குடுத்துடறேன் என்று சற்று கெஞ்சலாக கேட்டவுடன் குடுத்துவிட்டு நாளைக்கு கண்டிப்பா குடுத்துடணும் என்று சொல்லி விட்டு பதிலுக்கு கூட காத்திராமல் அப்பா பார்த்து விடுவாரோ என்று வேகமாக வெளியேறினாள். வெங்கிக்கு சந்தோசம் தாங்கவில்லை. அவள் திரும்பிய அடுத்த நொடி செய்தித்தாள் அட்டை போட்ட நோட்டை திறந்து பெயர் பார்த்து விட்டான். ரா.ஓவியா என்றிருந்தது. பார்த்ததை காட்டிக் கொள்ளாமல் அவள் வெளியேறுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.கேட்டை விட்டு வெளியே இறங்கி நடந்தவள் தயாராக நின்று கொண்டிருந்த அவள் அப்பாவின் பைக்கில் ஏறி அமர்ந்து வண்டி கிளம்புமுன் சட்டென திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். ஓவியா.................!! என்று சத்தமாக எல்லோருக்கும் கேட்குமாறு கத்தவேண்டும் போலிருந்தது அவனுக்கு.
அவ்வளவுதான்..................................................
தினேஷ் ஓடி வந்து........ டேய் மாப்ள எப்படிடா...........
கலக்கிட்ட... போ!!! சான்ஸ் ஏ இல்லடா....என்னமா பார்க்குறா...மாப்ள!!!! அவ உன்ன லவ் பண்றாடா....100 % அடிச்சி சொல்றேன் என்று தூக்கிச்சுற்றாத குறையாக குதூக்களித்தான்.
வெங்கிக்கு அங்கிருந்து நடப்பதே தெரியவில்லை. பறப்பது மாதிரி உணர்ந்தான்.
அன்றிரவு கடைசி பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் மணி பதினொன்றாயிருந்தது...
அம்மா தூங்கியிருந்தார். எழுந்து வந்து பிளேட் எடுத்து வைத்து , என்னப்பா இன்னைக்கு இவ்ளோ நேரம் , முகம் அலம்பிட்டு வா, அதுக்குள்ள குழம்ப சுடவைக்கிறேன் என்றாள். சாதம் அள்ளிப்போட்டு தண்ணி எடுத்து வைக்கும் போது பாதி தூக்கத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது.

அம்மா....!! இன்னைக்கு ஒரு வேல ஆச்சு தெரியுமா என்றான் .சொன்னாத்தானே தெரியும் என்றாள் அம்மா. அந்த பொண்ணில்ல....அதான் என்ன பார்த்துட்டே இருக்குன்னு சொன்னேன்ல...அதாம்மா அந்த டியூசன் பொண்ணு....
அவ கிட்ட இன்னைக்கு பேசினேன். அவ பேர் கூட சொன்னா...ஓவியா....!! நல்லா இருக்கில்ல பேரு என்று வழிந்தான்.அம்மாவுக்கு கோபம் வந்து விட்டது....இதெல்லாம் யாரு அந்த உன் கூட்டாளி வேலையா.....?? நானும் பையன் எதோ ஜோக்கா சொல்றானேன்னு பார்த்தா இது வேற மாதிரி இல்ல போகுது என்றாள்.....
அதெல்லாம் ஒன்னும் இல்லமா.....உங்ககிட்ட போய் சொன்ன பாருங்க... என்ன அடிக்கணும் என்று சொல்லி விட்டு பேசாமல் ஆகிவிட்டான். கண்ணு இதெல்லாம் வேணாமப்பா ..வயசு கோளாறு....முதல்ல படிச்சு முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு போ.. இதவிட நல்லா பொண்ணு கிடைப்பா என்றாள் அம்மா. அதெல்லாம் ஒன்னும் மண்டைக்கு ஏறவில்லை வெங்கிக்கு..அவன் மனம் முழுதும் வியாபித்திருந்தாள் ஓவியா...

அன்றிலிருந்து இரண்டு வாரத்திற்குள் முழுவதுமாய் மாறியிருந்தான் வெங்கி. பள்ளி முடிந்தவுடன் மாம்ஸ் கடையில் வைத்து யுனிபார்ம் கழற்றி, காலையில் வரும்போதே பைக்குள் ஒரு ஜோடி கலர் சட்டை பேன்ட் எடுத்து வந்து டியுசனுக்கு முன் மாற்றி கொள்வான். இந்த மாற்றங்களைக் கண்டு மாம்ஸ் தினேஷிடம் கேட்டே விட்டார். என்னடா நடக்குது இவனுக்கு...அவன் பாட்டுக்கு பேசுறான். நம்ம கிட்ட அதிகமாவும் பேசுறதில்ல..டுயுசன்க்குன்னு ஸ்பெஷல்லா சட்ட மாத்தின்னு போறான்....என்ன விஷேஷம் என்றார். எல்லாவற்றையும் ஒப்பு வித்தான் தினேஷ்.
மாம்சும் அவர் அளவுக்கு ஏதேதோ அட்வைஸ் பண்ணிப்பார்த்தார்..வெங்கி கேட்பதாய் இல்லை.இல்ல மாம்ஸ்...படிப்பெல்லாம் ஒன்னும் கெடல....அவல மிஸ் பண்ன தோனல எனக்கு....காலேஜ் முடிஞ்ச பின்னாடி தான் கல்யாணம் எல்லாம்...என்று அவரையே சமாதானம் செய்து விட்டான். என்னமோப்பா நான் சொல்றத சொல்லிட்டேன் அதுக்கு மேல உன் விருப்பம்...என்று அமைதியாகிவிட்டார்.....
அன்றொருநாள்....
கடையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் போது, தினேஷ் உள்ளே ஓடி வந்து........டே....மாப்ள.....மாப்ள வெளியில வாடா சீக்கிரம்.....சீக்கிரம் என்று அரக்க பரக்க கத்தினான். அங்க பார்டா..உன் ஆளு சைக்கிள்ல தனியா போறா....
இந்த வழியாதான் போனா.....இப்போ தான் பார்த்தேன்....அவ அப்பன்காரன் சைக்கிள் வாங்கி குடுத்துட்டான்ன்னு நினைக்கிறேன்...சூப்பர் டா மாப்ள.....இனி ஒன்னும் பிரச்னை இல்ல.....இந்த பக்கம் தான் எங்கியோ அவ வீடு...எப்படியும் டியுசனுக்கு இந்த வழியாத்தன ....போகணும்....கலக்கல்ஸ் தான் என்றான்.
வெங்கிக்கு நிலை கொள்ளவில்லை.....அவன் காதல் சிறிது சிறிதாய் அவன் கண் முன்னாலேயேநிறைவேறிக்கொண்டிருந்ததை நினைத்து நினைத்து ஆனந்தப்பட்டான்.
அவளும் மாறியிருந்தாள். இப்போதெல்லாம் டியூசனில் அவனை அடிக்கடி திரும்பிப்பார்ப்பாள்.... நகைப்பாள்.
யாரோ கேள்வி கேட்கப்பட்டு எழுப்பப்பட்டாலும் அந்த சாக்கில் எப்படியாவது ஒரு முறை அவனை திரும்பி பார்த்து விடுவாள்.

நீ பார்க்கும் போது நான் சைகை ஆகிறேன்
நீ பார்க்காத சமயங்களில் சைக்கோ ஆகிறேன்.

அவள் டியூசன் கிளம்பி வரும்வரை மாம்ஸ் கடையில் காத்திருந்து பின் அவளின் சைக்கிலுக்கு பின்னாலேயே தினேஷோடு கிளம்பி`போவது வழக்கமாகி விட்டிருந்தது. இவனிடம் சைக்கிள் இல்லாததால் சமயங்களில் சைக்கிளை தள்ளிக்கொண்டே அவளும் இவனும் நடந்து போவார்கள். தினேஷ் கழன்று கொள்வான். இப்போதெல்லாம் தம் அடிப்பதையும் நிறுத்திவிட்டான் வெங்கி. நிறைய மாற்றங்கள். அவளுக்கும் இப்போது மாம்ஸ் கடை பரிட்சியப்பட்டிருந்தது. . கடைக்கு அருகே வர வர பெல் அடித்து சிக்னல் குடுப்பாள். கொஞ்சம் முன்னேறிப்போய் நிறுத்திக் காத்திருப்பாள். வெங்கியும் யாருக்கும் தெரியாததாய் அவசரமாய் கிளம்புவான். ஒரு முறையாவது இங்க கூட்டியாடா....காபியாவது குடிச்சிட்டு போகட்டும் என்பார் மாம்ஸ். எத்தனையோ முறை யாரும் இல்லாதும் போது கூட கடைக்கு அழைத்தும் மறுத்து விட்டாள். அவளுக்கு அவனோடு பேசுவதே பயம். எங்குமே வரமாட்டாள். ஒரு முறை அப்படித்தான், நடந்து போய்க்கொண்டிருக்கும் போது திடீரென்று பைக்கில் தோன்றினார் அவள் அப்பா. வெலவெலத்துப்போய்விட்டது அவளுக்கு...... என்னம்மா...!! சைக்கிள் எதுக்கு வாங்கி கொடுத்தது அப்போ!!! இப்படிதள்ளினு போறதுக்கா?? என்று திட்டிவிட்டார். அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு அவர் தான் வந்து விட்டு கூட்டிச்செல்வார்.
வாரம் கழித்து தான் சொன்னாள்...யார் அந்த பையன்...என்று கேட்டாராம். கூட டியூசன் படிக்கிற பையன் தான் என்று சொல்லியும், இனி அந்த மாதிரி ரோட்ல எல்லாம் நின்னு பேசக்கூடாது, முடிஞ்சவுடனே நேரா வீட்டுக்கு வந்து சேரனும் என்று கண்டித்ததாக சொன்னாள்.

இப்படியே போய்............
பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு மாதக்காலமே இருந்தது. இதுவரையிலும் அவன் காதலிப்பதாக அவளிடம் ஒரு முறை கூட சொன்னதில்லை. அவளும் கேட்டதில்லை. எப்படியாவது நல்லா மார்க் வாங்கி ரெண்டு பேரும் ஒரே காலேஜ் ல சேர்ந்து படிக்கணும் என்று அவள் சொல்வது மட்டுமே அவள் அவன் அருகாமையை அதிகம் விரும்புகிறாள் என்பதற்கு ஒரே சான்று. அவள் அவனை எப்படி பார்க்கிறாள்.... என்ன நினைக்கிறாள் என்பதெல்லாம் வெங்கிக்கு அக்கறை இல்லை..அவனைப்பொருத்தவரை அவளின்றி அவன் உலகம் இல்லை. அடுத்த வாரத்தோடு டியுசனும் முடிவடைகிறது. பள்ளியிலும் மாடல் பிரக்டிகல், மாதிரித்தேர்வு என்று நேரம் சரியாக இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை......
சாயங்காலம் ஐந்து மணி...
வழக்கம் போலவே டியூசனுக்கு கிளம்பி வந்துக்கொண்டிருந்தாள் ஓவியா. மாம்ஸ் கடை அருகில் வந்தவுடன் சைடில் பார்த்து பெல் அடித்தாள். அது ஒரு வளைவு என்பதாலும் மேற்கொண்டும் அவள் கடையைப்பார்த்துக்கொண்டே வந்ததாலும் எதிரே வந்த மோட்டார் பைக்கில் மோதிவிட்டாள். பைக்கில் வந்தவன் பிரேக் போட்டு விட்டான்..தடுமாறி கீழே விழுந்தாள். புத்தகங்கள் உருண்டோடின..உள்ளிருந்து வெளியே வந்த வெங்கி இதைப்பார்த்ததும் பதறி விட்டான்... விழுந்தடித்து ஓடினான் அவளிடம்...அப்போது அவன் பார்வையில் அவள் மட்டுமே தெரிந்தாள்....ரோட்டைக் கடந்து சென்று அவளைஅடைவதற்குள் இடது பக்கம் இருந்து வந்து வளைவில் வேகமாக திரும்பிய மகிந்திரா பால்வண்டி கட்டுப்படுத்த முடியாமல் வெங்கியை அலேக்காய் தூக்கிப்போட்டது. என்ன நடக்கிறது என்று கணிப்பதற்க்குள் இரத்தம் தெறித்து............குப்புற விழுந்து இறந்துக்கிடந்தான் வெங்கி..
பால் வண்டிக்காரன் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான்..........

வழிந்து உறையும்
தெறித்த ரத்த சொட்டுக்களில்
சில்லுச்சில்லாய் உடைந்த இலட்சியமும்,
அடுத்தப் பிறவியிலும் அவளைக்காதலிக்க
காத்திருக்கும்
காத்திருப்புகளும்....


தனது மகள் செல்வி போட்டோவு க்குப்பக்கத்தில் தோற்றம், மறைவு எழுதி பெரிதாய் மாட்டினார் வெங்கியின் படத்தையும்.....இப்போதெல்லாம் யாரையும் உள்ளே சிகரட் பிடிக்க அனுமதிப்பதில்லை மாம்ஸ்.

0 comments: