Pages

Sunday, July 24, 2011

மௌனம்...


விபூதி பூசி மரக்கச் செய்து விட்டு
சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல
உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து
உன்னைப்பற்றியதான கனவுகளை
குத்தி விட்டுச் செல்கின்றது காதல்....

தாவணியின் ஓரங்களில்
நீ முடிந்து வந்துக் கொடுத்த
கல்யாண வீட்டு மைசூர் பாக்கு
பல்லிடுக்கில் சிக்கிக்கொண்டு
நெடுநேரமாய் உன் பிரியத்தை
"வலி" யுறுத்திக் கரைந்தது....

சலனமின்றி
என் நிழலின் காதருகே குனிந்து
ரகசியமாய் எதோ சொல்லிப்போகும் உன் மௌனம்
ரம்மியமான ஓராயிரம்
இசைத்தட்டுகளை என் இதயத்தின்
செவிட்டு அறைகளில் மீட்டிச்செல்கின்றது...

நிழலுக்கும் பிம்பங்களுக்கும்
வித்தியாசம் புரிபடாது போன
அத்தருணத்தில்
பிம்பங்களுக்குள் வெளிப்படுவதாய் நினைத்த
உன் தயக்கம் குழம்பிப்போய்
என் நிழலுக்குள் வெளிப்பட்டு நீள்கின்றது

முற்ப்பிறவியில்,
இதைவிடவும் அதிகமாய்
உன்னைக்காதலித்திருக்கக்கூடும்...நான்
உன்மேல் இன்னும் பைத்தியம்
போதாதென்று இழுத்தடிக்கின்றதோ
காதல்...?

நான் சந்தர்ப்பவாதிதான்...
நீ அருகிலில்லாத சமயங்களில்
உன் நினைவுகளை மட்டும் காதலிக்கிறேனே..!!

தயவுசெய்து சொல்லிச்செல்
என்ன விலைக்கு விற்றாய்
என்னால் வாங்கமுடியாத
அந்த இதயத்தை ????

0 comments: