
தவறி விழுந்த ஒருரூபாய் நாணயம்
உருண்டோடி அரை வட்டமடித்து
இயன்றவரை பூமியின் நீல அகலங்களை
அளவெடுத்து அடங்கும் லாவகம்,
இறைந்துக்கிடக்கும் உன்னைப்பற்றியதான
கனவுகளை கவிதையாக்குவதில்
பிடிபடுவதில்லை
பிரகடனப்படுத்த வேண்டி
பிரபஞ்சம் சுற்றியலைந்து தோற்று
கடைசியில்
உன் மில்லிமீட்டர் புன்னகையில் நிலைப்பட்டு
ஞாபகம் இழுத்துப் போர்த்தி
கால் மடக்கிக் குறுகிப்படுத்துறங்கும்
நீயற்ற பொழுதுகளில்
வெறுமை.
பகுதியை விகுதியாக்கி
விகுதியை பகுதியாக்கி
கூட்டிக்கழித்து
அதை பெருக்கி வகுக்கும்
நீயற்ற நொடிகளை
மாதங்களாய் கணக்கிடப்பழகிய
காத்திருப்புகள்..
கொடூரமாய் ஏக்கங்களை கொன்று தின்று
நினைவை உறிஞ்சிக்குடித்து
போசாக்காய் வளரும் தனிமை
நாளை இன்னாறெனச் சொல்லாமல்
நீண்ட நேரம் தட்டிக்கொண்டிருக்கலாம்
உன் ஆசையின் கதவுகளை....