
பால்யம் மென்று முடித்துத் துப்பும்
சக்கைகளே வாழ்க்கையின்
மிச்ச மீதிகள்...
அறியாதிருக்கும் போதும்
அறிந்து முடித்த போதும் மட்டுமே
முழுமையாய் சிரிக்கின்றான்
மனிதன்!!
அடையாளங்களின்றிப் பிரவேசிக்கும் போது
ஆகாயத்தின் அடுத்தப்பக்கம் கூட
ஆடு மைதானம் ஆகிவிடுகின்றது..
கட்டிய மணல் வீட்டிற்கு
அழைப்பின்றி வருகை தந்து
நட்சத்திரங்கள் ஓட்டிச்செல்கின்றது வானம்..
காற்றைக் கயிறு திரித்து
நிலவைக் கட்டி பூமிக்கு இழுத்துவர
கை சேர்க்கின்றது கடல்...
அடையாளங்கள் முகவரியானபின்.......
அடுத்த வீட்டு வளர்ப்பு நாய் கூட
அனேக நேரங்களில்
அனிச்சையாய்ப் பார்த்து குரைக்கின்றது...
தாமதங்களோ,
அவசரங்களோ
அகங்காரங்களோ
ஆர்ப்பரிப்புகளோ
என எதுவுமே புலனாவதில்லை குழந்தைக்கு...
பசிக்கும்,
வலிக்கும்,
மட்டுமே அழத்தெரியும் குழந்தைக்கு..
நம்மைப்போல் எல்லாக்காரணங்களுக்கும்
கண்களில் சிறுநீர் கழிப்பதில்லை....
கையில் கிடைத்த பொம்மையை
தேவதையாக்கி.,
புரிபாடாத பாஷைகளில்
மணிக்கணக்கில்
பேசிச்சிரிக்கின்றது அதனுடன்....
பொம்மைகளுக்குப் புரியும் மொழி
ஏனோ மனிதத்துக்கு
புரிபடுவதில்லை...
களைத்துத் திரும்பும் அப்பா,
அம்மாவை எப்படி மிரட்டுவார்...
என்பதற்கு.,
அழகாய் விழி உருட்டி
தத்ரூபமாய் நடித்துக்காட்டுகிறது
குழந்தை....
நடிக்கத் திராணியற்று.,
ஒட்டு மொத்தப்பொய்களும்
நிறமிழந்து வெளிறிப்போய் கிடக்கும்
அச்சமயத்தில்......,
நானும் ஆசைப்படுவேன்
மீண்டும் "குழந்தையாக".....!!
3 comments:
நிச்சயம் இப்பொழுதும் அனுபவித்து ஏங்க வேண்டிய
உணர்வுகள் புபேஷ்.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
child has an empty mind...mind is full of garbage in an adult...elaborate in your poetic thamizh on this, bupesh...how garbage accumulates in the mind, how it makes a man he is as an adult and what to do about it!
Post a Comment