அங்கொன்றும், இங்கொன்றுமாய்
இறைந்து கிடக்கும் கொண்டைஊசிகள்,
பாதி அணைந்த நிலையில்
கொசுவத்திச்சுருள்;
அதிகம் பிரசுரிக்கப்படும் பழைய நாளிதழ் ,
ரசமிழந்த சுவற்றுக்கண்ணாடி,
இப்போதோ அப்போதோ விழக் கூடும் மின்விசிறி,
எப்போதோ நின்றுபோன கடிகாரம்,
பெருக்கி கூட்டப்படாத தூசிகள்
கூட்டிப்பெருக்கப்படும் ஏளனங்கள்
என என்னென்னவோ கிடக்கின்றன
புதைக்கப்பட்ட சந்தோசத்தின் எலும்பு துண்டுகளாய்....
உதட்டுப்பூச்சி வண்ணக்கோல் நுனியில்
நேர்த்தியாய் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன
அடையாளங்கள் மறந்துபோன
எத்தனையோ பேர் உதடுகளின் நகல்கள்...
பசியின் ஒத்தடங்களில்
இலகுவாய் மறைந்து போகின்றது
குரூரத்தின் நகக்கீறல்கள் ...
மாதத்தின் மூன்று நாட்கள் மட்டும்
மூடியே கிடக்கின்றன
அவ்வப்போது திறக்கப்படும் கதவுகள் ..
மூச்சை முட்டும் தனிமையின் சீழ் நாற்றம்
அறையெங்கும் பரவிக்கிடக்கின்றது
கழற்றி விடப்பட்ட காலணிகள் அங்கலாய்க்கின்றன .....
சமுதாய நாற்றத்திற்கு இது எவ்வளவோ மேல்!!!
1 comments:
உங்களின் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்
Post a Comment