
என் வீடும் பக்கம், பக்கம்;
கிழவிக்கதைகளை
ஒன்றாகவே கேட்டு லயித்திருக்கிறோம்;
பாட்டி வடை சுடும் கதையில்
வடை இழந்து ஏமாறும் கிழவியாய் நான்..
காகமாய் தொலைவில் அமர்ந்து ஏளனித்தன
உன்னை பற்றியதான ஏக்கங்கள்;
நீ கடித்துக்கொடுத்த குச்சி ஐஸ் தின்றதில்
மருதாணிப்பூசிக்கொண்டன உதடுகள்..
அமிர்தம் தின்ற தேவனாய்
ஆர்ப்பரித்தது உயிர்...
வெட்டிக்கொடுத்த ரோஜாத்தண்டை
செண்பகப்பூச்செடிக்கருகில்
செம்மண் குழித்தோண்டி
சாணம் உருட்டித் தொப்பியிட்டு
சாமியெல்லாம் வேண்டி நட்டாய்..
அருக்கம் புல்லானாலும்
அடி நிறையத்தண்ணி இருந்தால்
அரை அங்குலத்திற்குமேல் வளராது
என்பதையும் பொருட்படுத்தாது
நாளுக்கு நான்கு தடவை
ஊற்றி வளர்த்த உறவுச்செடி
துளிர் விட்டு,
மொட்டு விட்டு,
பிறிதோர் நாளில்
உன் ரெட்டை ஜடையில் பூப்பூத்திருந்தது;
நீ என் பக்கம் நின்று
சிணுங்கி எடுத்த பள்ளிக்கூட போட்டோவில்
ஏதேதோ உருவங்கள் சிரிக்கின்றன
ஏதேதோ உவமைகள் அழுகின்றன ;
"பிரிள்" வைத்த சட்டையை
எனக்கும் தைக்கச்சொல்லி
அடம் பிடித்த வரைக்கும்
எட்டிப்பார்க்காத காமம்...
இன்று...
ஏதேச்சையாய் பார்த்த
உன் பார்வையின் சிணுக்கல்களில்
ஏராளமாய் கொழுந்து விட்டு எரிகின்றது..!!
ஏழுச்சொட்டு நீர் குடித்தும்
ஏதோதோ கேட்டு பயப்பட்டும்
இறங்காமல் "புரையேறல்"...
தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ என்னவோ!!
என் இரவுக்கு
தார் ஊற்றி மொத்தமாய்
கனவுகளை நடைப்பாதை ஆக்கிக்கொண்டாய்..
தீர்ந்த மைக்குச்சியை உதறி, உதறி,
முற்றுப்புள்ளி வைக்க முயல்வதாய்
காதல்...
உன் தயக்கத்திற்கு
நாளை மண நாள்..
என் மயக்கத்திற்கு மரண நாள்..
முழுதாய் அடைக்கப்பட்டிராத
அறைக்கதவின்
அடி முனை இடைவெளியில்
முணுமுணுத்தபடியே வெளியேறுகின்றன..
வெளியிட முடியாத
மௌனத்தின் ஒலிநாடாக்கள்!!