Pages

Monday, December 27, 2010

மௌனத்தின் ஒலிநாடாக்கள்!!

உன் வீடும்,
என் வீடும் பக்கம், பக்கம்;
கிழவிக்கதைகளை
ஒன்றாகவே கேட்டு லயித்திருக்கிறோம்;

பாட்டி வடை சுடும் கதையில்
வடை இழந்து ஏமாறும் கிழவியாய் நான்..
காகமாய் தொலைவில் அமர்ந்து ஏளனித்தன
உன்னை பற்றியதான ஏக்கங்கள்;

நீ கடித்துக்கொடுத்த குச்சி ஐஸ் தின்றதில்
மருதாணிப்பூசிக்கொண்டன உதடுகள்..
அமிர்தம் தின்ற தேவனாய்
ஆர்ப்பரித்தது உயிர்...

வெட்டிக்கொடுத்த ரோஜாத்தண்டை
செண்பகப்பூச்செடிக்கருகில்
செம்மண் குழித்தோண்டி
சாணம் உருட்டித் தொப்பியிட்டு
சாமியெல்லாம் வேண்டி நட்டாய்..

அருக்கம் புல்லானாலும்
அடி நிறையத்தண்ணி இருந்தால்
அரை அங்குலத்திற்குமேல் வளராது
என்பதையும் பொருட்படுத்தாது
நாளுக்கு நான்கு தடவை
ஊற்றி வளர்த்த உறவுச்செடி
துளிர் விட்டு,
மொட்டு விட்டு,
பிறிதோர் நாளில்
உன் ரெட்டை ஜடையில் பூப்பூத்திருந்தது;

நீ என் பக்கம் நின்று
சிணுங்கி எடுத்த பள்ளிக்கூட போட்டோவில்
ஏதேதோ உருவங்கள் சிரிக்கின்றன
ஏதேதோ உவமைகள் அழுகின்றன ;

"பிரிள்" வைத்த சட்டையை
எனக்கும் தைக்கச்சொல்லி
அடம் பிடித்த வரைக்கும்
எட்டிப்பார்க்காத காமம்...
இன்று...
ஏதேச்சையாய் பார்த்த
உன் பார்வையின் சிணுக்கல்களில்
ஏராளமாய் கொழுந்து விட்டு எரிகின்றது..!!

ஏழுச்சொட்டு நீர் குடித்தும்
ஏதோதோ கேட்டு பயப்பட்டும்
இறங்காமல் "புரையேறல்"...
தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ என்னவோ!!

என் இரவுக்கு
தார் ஊற்றி மொத்தமாய்
கனவுகளை நடைப்பாதை ஆக்கிக்கொண்டாய்..

தீர்ந்த மைக்குச்சியை உதறி, உதறி,
முற்றுப்புள்ளி வைக்க முயல்வதாய்
காதல்...

உன் தயக்கத்திற்கு
நாளை மண நாள்..
என் மயக்கத்திற்கு மரண நாள்..

முழுதாய் அடைக்கப்பட்டிராத
அறைக்கதவின்
அடி முனை இடைவெளியில்
முணுமுணுத்தபடியே வெளியேறுகின்றன..
வெளியிட முடியாத
மௌனத்தின் ஒலிநாடாக்கள்!!

Tuesday, December 21, 2010

நாங்கள் மா(ம)க்களா!!

மனிதரிடம் மட்கிப்போன சிநேகம்
மாக்களிடத்தில்
இன்னும் அப்படியே அப்பிக்கிடக்கின்றது...

வாரம் கழித்துப்பார்க்கும்
வளர்ப்புநாய் வெளிப்படுத்தும்
பிரிவின் ஏக்கம் இப்போதெல்லாம்
பிரியமானவர்களிடத்திலும் சாத்தியப்படுவதில்லை..

கொடுத்தலும்
பெற்றுக்கொள்ளலும்
சமவிகிதத்தில் இருக்கும்வரை
நீட்டிக்கின்றன மனித உறவுகள்...

அணைத்தல் குறித்தும்,
அரவணைத்தல் குறித்தும்,
அறியாமலும்
ஆராயாமலும்
பகுத்துக்குடுக்கின்றன இந்த ஐந்தறிவுகள்..

சாபமே கிட்டும் என தெரிந்தும்
காலம் காலமாய் தவம் கிடக்கும்
இந்த ஜென்மங்களில் ,
குலமில்லை ;
கோத்ரம் இல்லை;
பிரிவினை இல்லை
பிறிதோர் மொழியும் இல்லை;

உணவுக்கும் புணர்வுக்கும்
மட்டுமே எங்களில் சண்டை..
உங்களுக்கோ எல்லாவற்றிற்கும்....!!
எங்களுக்கு மரணம் ஒரு நாள்..
உங்களுக்கோ
ஒவ்வொரு நாளும்..!!

ஏ மனிதமே!!
மொத்தமாய் ஒன்று கேட்கிறோம்.
எங்களால் முடிவதில்லை
சிரிப்பதில்லை...
உங்களால் முடிந்தும்......???
இப்போது சொல்லுங்கள்
நாங்கள் மா(ம)க்களா !!!!!¿

Tuesday, September 14, 2010

பேருந்துபயணம் !!


நம் பார்வைகளுக்கிடையேயான பாலத்தில்
நாசூக்காய் பயணம் செய்கின்றது
காதல்.

உன் விழிகள் எழுதும்
அத்தனை இலக்கியங்களுக்கும்
எங்கு போய் பொருள் தேட ???

நான் என்னை மறக்கும்போது உன்னை நினைக்கவும்
நீ உன்னை மறக்கும் பொது என்னை நினைக்கவும்
நாம் நம்மை மறக்கும்போது
தம்மை நினைத்துக்கொண்டன "நம் நினைவுகள்".

உன் நெற்றியில் தவழ்ந்திருக்கும் இரண்டொரு முடி
எப்போதும் புதுக்கவிதை வரைந்துக்கொண்டிருக்கின்றது

மறந்து இமைக்கையில்
நீ புன்னகைப்பதாய் தெரிந்தஅந்த கண நொடியில்
கோடி செல்கள் இனப்பெருக்கம் அடைகின்றன என்னுள்....

விற்பனைக்குப்போய் திரும்பிய
பூக்கூடையின் எஞ்சிய மலர்களில்
கனமாய் அமர்ந்திருக்கின்றது
எனக்கானதான ஏமாற்றம்..

கசாப்புக்கடைக்காரன் விரல்களுக்கிடையே
லாவகமாய் நுழைந்து தப்பும்
தடித்த கத்தியாய்
தவிப்புகள்...

உன் முனைவின் எல்லா முடிவிலும் கால் முறித்துக்கொண்டன
வார்த்தைகள்..

பேருந்து நிறுத்தம் வரைக்கும்
சளைக்காமல் கூடவே வந்து தொலைந்தது
நம் அசட்டு தைரியம்.

ஏதாவதொரு திடீர் "பிரேக்"கிடலில்
அவசரமாய் வெளிப்படலாம் எனது பெயர்
அது போதும்.
உன் ஒட்டு மொத்த காதலையும் சொல்ல!!

Wednesday, August 4, 2010

மகனே...

ஒவ்வொரு விரலாக
நீட்டக்கற்றுக்கொடுத்தேன்
உனக்கு.....

ஒரேயடியாக நீட்டக் கற்றுக்கொடுத்துவிட்டாய்
எனக்கு....!!

Wednesday, May 19, 2010

உன்னைப்பற்றியதான....

* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த
அறைக்குள் புகுந்து
அடித்துத்துவைக்கின்றன
உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்;

*வலித்தல் குறித்த
எந்தபிரக்ஞையுமற்று
நீட்டித்துப்படுத்தி௫க்கின்றது காதல்..

* இரவல்புத்தகம்
அலமாரியில்
நம் ஞாபகங்களை அடைக்காக்கின்றது.
தி௫ப்பிக்கொடுக்க மறந்ததாக நானும்.,
தி௫ப்பிக்கேட்க மறந்ததாக நீயும்,
நடித்துக்கொண்டேயி௫க்கிறோம் இன்னமும்..

* ஆசையின் ஆழமான பள்ளத்தாக்கை
பயத்துடன் எட்டிப்பார்க்கின்றதென்
ப௫வம்..

* சேற்றுக்கால்களுடன் நீ மிதித்துச்சென்ற
குப்பைக்காகிதத்தின் கறைகளில்
புரியாததாய் வெளிப்படுகின்றது என் இதயம்.

* நிசப்தம் குறித்தும்,
உன் நிதர்சனம் குறித்தும்
கவிதை எழுதத்தொடங்குகிறேன்,

* உடைத்தலுக்காகவோ
உ௫குவதர்க்காகவோ
கசிவதாயில்லை -கடவுள்,
முழுவதாய் ஒப்படைக்க நம்பிக்கையின்றி
தி௫ம்பத்தி௫ம்பச் செல்கிறேன்
எல்லா வழிப்பாடுகளுக்கும்..

* உன்னைப்போலவே
சிலநேரங்களில்
எண்களை தலைகீழாய் எண்ணப்பிடித்தி௫க்கின்றது,
தலைப்புயோசிக்க கவிதையை
தலைக்கீழாய் படித்துப்பார்ப்பது மாதிரி..!!

Monday, April 12, 2010

நீ மட்டும்...!!

பொட்டலக்காகிதத்தில்
என் கையெழுத்தி௫ந்ததை
அவசரமாய் எடுத்துவந்து
ஆவலுடன் காட்டினாய்..
அன்றிலி௫ந்துதான்
என் தலையெழுத்து மாறத்துவங்கியது...

மற்றொ௫நாள்,
ஊர்முற்றத்து அடிக்குழாயினுள்
சொ௫கி வைத்து, என்பெயர்
தண்ணீரில் கரைந்துசெல்வதாய் நகைத்தாய்..
கரைவதாயி௫ப்பின்
அது உன்கண்ணீரில்மட்டுமே இ௫க்கட்டும்
என்று கவி சொன்னேன்...
அன்றுமட்டும் பகலிலும் நட்சத்திரங்கள்.,
உன் கண்களில்......

வேறூர் மாற்றலாகும் தந்தையுடன்
நீ கிளம்புகையில்.,
காகிதக்கேமிராவால் புகைப்படம் பிடித்தாய்;
எனக்குமொன்று அனுப்புவதாய்
சொல்லிச்சென்றாய்..
ஏனோ இன்றுவரை வந்தடையவில்லை,
நீ அனுப்பாதவையும்.,
நான் அனுப்பியவையும்...!!

இன்று
வளைகுடா நிறத்து புடவையுடன்
திடீரென வாசல் ஏறி நிற்கிறாய்...
உயிர், கண்களில் ஏறி
இடம்பிடித்து அமர்கிறது...
அழகி நீயா?
அழகென்றால் நீ மட்டும்தானா?
என்று நிச்சயமாய் கேட்டி௫ப்பேன்.,
நீ மட்டும் பத்திரிக்கையுடன்
வராதி௫ந்தி௫ந்தால்.....!!!